கோவை: ஊரடங்கு காலத்தில் எந்த தனியார் நிறுவனமும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் நிறுவனமான தமிழக பிஸ்என்எல் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்க முயற்சியில் ஈடுபடுகிறது.
கோவை: ஊரடங்கு காலத்தில் எந்த தனியார் நிறுவனமும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் நிறுவனமான தமிழக பிஸ்என்எல் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்க முயற்சியில் ஈடுபடுகிறது.
தனியார் துறைக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய அரசுத்துறை நிறுவனம் முரணாக செயல்படுவதை ஏற்கமுடியாது. உடனடியாக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு தரவேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணிநீக்க முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பதும் மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இது நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பகுதிகூட இல்லை என்பது வேதனையாகும்.
இந்த ஒப்பந்த தொழிலாளர்களின் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு பிறகு தற்போதுதான் இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நல திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த பத்து மாத காலத்திற்கும் மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்காக அந்த தொழிலாளர்கள் பலமுறை முறையிட்டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னரும் கூட தற்போதுவரை ஊதியம் தரப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா தொற்று நோய் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழக பிஎஸ்என்எல் நிர்வாகம், அனைத்து மாவட்டங்களிலும் ஊதியம் இல்லாத நிலையிலும் தற்போது பணியாற்றிக் கொண்டுள்ள ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து விரட்ட முயல்கின்றது.
ஊரடங்கு காலத்தில் எந்த தொழிலாளியையும் வேலையை விட்டு நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறது. ஆனால் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை புதிய முறையிலான டெண்டர் என்று கூறி அவர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பது முரணாக உள்ளது.
தனியார் துறைக்கு முன் உதாரணமாக திகழ வேண்டிய அரசு நிறுவனமே ஊழியர்களை பணிநீக்க முயற்சி மேற்கொள்வது தனியார் துறையின் அத்துமீறல் நடவடிக்கையை கேள்வி கேட்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுவோம் என்பதைக்கூட உணராதது வேதனையாக உள்ளது. மேலும், சுமார் ஒரு வருட காலமாக ஊதியத்தை தராமல் இருப்பதுடன், அவர்களை பணியில் இருந்து விரட்டுவது என்பது மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
புதிய டெண்டர் முறையில், டெண்டர் எடுத்தவருக்கு இந்த ஊரடங்கு காலத்திலேயே, அவர் SECURITY DEPOSIT கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி என்று டெண்டர் வழங்கப்படுகிறது. டெண்டர் எடுத்தவரோ அல்லது அவரது நிர்வாகியோ எடுத்த பணிகளுக்கு ஆட்களை நியமிக்கக்கூட இயலாத வண்ணம் ஊரடங்கு இருக்கும் போதும், வேண்டும் என்றே நிர்வாகம் அவர்களுக்கு டெண்டர் கொடுப்பதன் நோக்கம் என்ன? ஊரடங்கு காலத்தில், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கையை ஏற்க முடியாது.
மேலும், சமூக தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராட இயலாத சூழலை பயன்படுத்தி, பரிதாபகரமாக வாழ்க்கையை நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலை செய்த நாட்களுக்கு ஊதியமும் தராமல், அவர்களை பணியில் இருந்து விரட்டுவதற்காக தமிழக பிஎஸ்என்எல் நிர்வாகம் முயற்சி செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது. ஒப்பந்த தொழிலாளர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது. அவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெண்டர் முறையை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும் என தமிழக பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.