கோவை: கோவையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி, உணவு வாங்க மறுத்து வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி, உணவு வாங்க மறுத்து வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரத்தினபுரி மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் இங்கு பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இன்றி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
கோவை மாநகர காவல்துறையின் சார்பில் இவர்களுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் உணவு வாங்க வந்த நூற்றுக்கும் மேற்பட்ட உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வடமாநில இளைஞர்கள் உணவை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களுக்கு உணவு வேண்டாம், ஊருக்கு அனுப்பினால் போதும் என கூறி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும், அவர்களை அமரவைத்து இந்தி மொழி தெரிந்த பெண் காவலர் மூலம் இந்தியில் இளைஞர்களை சமரசப்படுத்தினர். வடமாநில இளைஞர்களை ஊருக்கு அனுப்ப கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு உணவினை வாங்கி சென்றனர்.