கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் மருத்துவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து வீடு திரும்பினர்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் மருத்துவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து வீடு திரும்பினர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மெள்ள மெள்ள உயருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பில் இருந்து 46 பேர் குணம் அடைந்துள்ளனர்.
அதேபோல, இதுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 54 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள், பத்து பெண்கள் உப்பட 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களை பழக்கூடைகளை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர், கு ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா ,இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களை உற்சாகமூட்டும் வகையில் கைகளை தட்டி, இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது:-
மருத்துவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால், கோவையில் இதுவரை 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்போடு மட்டுமே இது சாத்தியமானது. ஆகவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு நன்றி.
ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் 4 ஆயிரம் பேரை சோதனை செய்ததில், 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 1000 பேருக்கு சோதனை செய்ததில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 49 பேர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் விரைவில் குணமடைந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
மேலும், 100 சதவிகித கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாவட்டமாக இருப்பதற்கு மக்கள் முழுமையாக அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும், எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.