கோவை: மாறுபட்ட முடிவுகள் வருவதாக நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கோவை: மாறுபட்ட முடிவுகள் வருவதாக நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18,601ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 590ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,336 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றை கண்டறிய பிசிஆர் முறை ஏற்கனவே உள்ள நிலையில், 30 நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்வதற்காக ரேபிட் கிட் டெஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் வருவதாக ராஜஸ்தான் அரசு குற்றம்சாட்டியது.
அதே போல, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் மாறுபட்ட பரிசோதனை முடிவுகள் வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆய்வு செய்து வருவதாகவும், மீண்டும் எப்போது பயன்படுத்தலாம் என்று விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட்களை கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.