கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 பேருக்கும், சிறுமுகையில் 2 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 பேருக்கும், சிறுமுகையில் 2 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை சிவானந்தா காலணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி 600 வட மாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை குழந்தைகள் நல அறக்கட்டளை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரோடு இணைந்து வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராசாமணி, கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கோவை மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், 36 பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் 3 பேர், சிறுமுகை பகுதியில் 2 பேர் என 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்றுக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், இரண்டாம் கட்ட ஊரடங்கு கோவைக்கு மிக அவசியமானது என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரு இலட்சம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளை தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது எனவும், ஊரடங்கு முடியும் வரை தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.