கோவை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்காக தவித்து வரும் நிலையில், தமிழக அரசு வழங்கிய கொரோனா நிதியையும் ஏழை எளிய மக்களுக்கு தராமல் ரேஷன் கடை ஊழியர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்காக தவித்து வரும் நிலையில், தமிழக அரசு வழங்கிய கொரோனா நிதியையும் ஏழை எளிய மக்களுக்கு தராமல் ரேஷன் கடை ஊழியர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் -19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடையால் தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பினரும் உணவுக்காக திண்டாடி வருகின்றனர்.
பசியா? பிணியா ? போராட்டம்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் முதற்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த 21 நாட்கள் முடிவடைந்ததையடுத்து, மாநில முதல்வர்களின் கோரிக்கைக்கிணங்க மீண்டும் மே-3ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தடை உத்தரவு ஒரு புறம் நோய் பரவலை கட்டுப்படுத்தினாலும் மற்றொருபுறம் ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து ஒரு வேளை உணவிற்காக ஏங்க வைத்துள்ளது.
இப்படி பல பகுதிகளில் பசியா ? பிணியா ? என்று இரு பிரச்சனைகளை சுமந்தபடி பொதுமக்கள் மனம் நொந்து வாழ்ந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த மக்களின் துயரங்களை நீக்க அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பசியாற்றி வருகின்றனர். இப்படி மனிதநேயத்துடன் உதவும் கரங்களால் ஓரளவிற்கு பொதுமக்கள் பசியின்றி தங்களின் நாட்களை கடத்தி வருகின்றனர்.
அநியாயம் செய்யும் நியாய விலை கடைக்காரர்கள்..!
பொதுமக்கள் படும் துயரங்களை சற்றே தணிக்க முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் 1000 ரூபாய் ரொக்கம், அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகிறது தமிழக அரசு.
இந்த இக்கட்டான சூழலில், சில இடங்களில் நியாய விலை கடை கடைக்காரர்கள் பொதுமக்களுக்கு அரசு வழங்கிய நிவாரண பொருட்களில் முறைகேடு செய்து வரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நஃவ்பல் என்பவர் கூறும் போது:
அரசு கொரோனா நிவாரண பொருட்களாக ரேஷன் கடையில் வழங்கிய பொருட்கள் மிகவும் எடை குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து கரும்புக்கடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து தாசில்தாருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்தோம். அதேபோல, சந்தையில் விலைமதிப்புள்ள பச்சரிசி, கோதுமை போன்ற பொருட்களை குறைத்துக் கொடுக்கும் நியாயவிலை கடைக்காரர்கள் விலை மதிப்பு குறைவுள்ள பொருட்களை கொடுத்து பொது மக்களை ஏமாற்றுவதாக தெரிவித்தார்.
சோகமான இந்த சூழலிலும் கொள்ளையடிப்பதில் தயக்கம் காட்டாத நியாய விலை கடை ஊழியர்கள்

கோவை இடையர்பாளையம், டிவிஎஸ் நகர் பகுதியில் வசித்து வரும் அனந்தகுமார் என்பவரது ரேஷன் அட்டை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொலைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக இவருக்கு ஸ்மார்ட் கார்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இதை பயன்படுத்தி அதே பகுதியில் உள்ள பாரதியார் மகளிர் நியாய விலை கடை எண் இரண்டில் 31EW017PN என்ற எண் கொண்ட கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இத்தனை நாட்கள் அனந்தகுமாரின் ரேஷன் பொருட்களையும், கடைசியாக அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதியையும் கொள்ளையடித்து உள்ளதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சோகமான இந்த சூழலிலும் கொள்ளையடிப்பதில் தயக்கம் காட்டாத நியாய விலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கார்டு பற்றி விவரம் சேகரிக்க, பாதிக்கப்பட்ட அனந்தகுமார் அரசின் நியாய விலைக்கடை "கால் சென்டருக்கு" அழைத்து ஆதார் எண் சொல்லி விசாரித்த போது தற்போது வரை ரேஷன் அட்டை பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அனந்தகுமார் தெரிவிக்கையில்:
எனது கார்டு தொலைந்த நிலையிலும் எனது ரேஷன் பொருட்கள் எனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த கடையில் பணிபுரியும் ஊழியரும் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். ஆகவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது ரேஷன் கார்டை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த ரேஷன் கடை புகார்கள் உயரதிகாரிகளின் பார்வைக்கு டிவிட்டர், மற்றும் சமூக வலைதளம் மூலம் சென்றுள்ளது.
தொடர்ந்து வரும் புகார்களின் காரணமாக, கோவை மாவட்ட ஆட்சியர் நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு நியாயமான முறையில் அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாரிகள் புகாருக்கு உள்ளான கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சர்க்கிள்-1 தாசில்தார் சகுந்தலா கூறும் போது:
எனக்கு இந்த ரேஷன் கடை குறித்து புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பாதிக்கப்பட்ட ஐந்து நபர்களிடம் நேரடியாக புகார் பெற்று, விசாரணை மேற்கொண்டுள்ளேன். தவறு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஏழை எளியவர்கள் பயன்படுத்தும் நியாயவிலை கடைகளில் அநியாயமான முறையில் நடைபெறும் பதுக்கல்கள், மற்றும் கடத்தல்கள் தடுக்கப்படும் போது தான் அரசின் உதவிகள் பொதுமக்களுக்கு உரிய முறையில் கிடைக்கும், என தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்டு வரும் கொரோனா நிவாரண பொருட்கள் தங்குதடையின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.