திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 22 மாநிலங்களைச் சேர்ந்த 41,273 தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து வருவதாக திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 22 மாநிலங்களைச் சேர்ந்த 41,273 தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து வருவதாக திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூரில் 41 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவர் , சுகாதாரப்பணியாளர்கள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கேரள எல்லையில் முழு பரிசோதனை செய்தபின்பே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதே போல், திருப்பூர் மாநகராட்சியில் 47 வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது எனவும் திருப்பூர் மாவட்டத்தில் 22 மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 41273 பேர் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருவதாக கூறினார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு 200 முழு உடல் கவசம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் நேற்றைய தினம் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமானதையடுத்து இன்னும் ஒருசில தினங்களில் இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு கூட்டத்தை குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.