கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று (20-02-2020) மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அறிவித்துள்ளார்.
கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று (20-02-2020) மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக இதுவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையிலும், நோய் துடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆம்னி பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகள், அரசு பேருந்துகள், கார், சரக்கு வாகனங்கள் ஆகியவைகளை முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்தும் பணி மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய சோதனை சாவடிகளில் சுகாதார முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் சோதனை சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படுகிறது.
கோவை மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்திலிருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து வாகன தொடர்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்துறை காவல்துறை போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.