கோவை: கோவையில் இருவேறு மதப் பிரிவினர் நடத்திய கடையடைப்பு போராட்டத்தின் போது தடாகம் சாலையில் இரண்டு இளைஞர்கள் ஒரு கடையின் மீது கல்வீசித் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கோவை: கோவையில் இருவேறு மதப் பிரிவினர் நடத்திய கடையடைப்பு போராட்டத்தின் போது தடாகம் சாலையில் இரண்டு இளைஞர்கள் ஒரு கடையின் மீது கல்வீசித் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கடந்த மார்ச் 7ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அதேபோல, கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்தும், இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அதே நாளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கடையடைப்பு போராட்டத்தின் போது கோவை தடாகம் சாலையில் உள்ள லூனா நகரில் செயல்பட்டு வரும் "சுரபி பில்ட் மார்ட்" என்ற கடை வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. சுமார் ஒரு மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்திருந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தை திடீரென கடை முன்பு நிறுத்தி கல்வீசித் தாக்கினர். இதில் கடையின் முன் பகுதியில் உள்ள கண்ணாடிகள் உடைந்தது.
இதையடுத்து, கடைக்குள் இருந்த ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு வெளியே வருவதற்குள் அந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும், கடந்த 9ம் தேதி ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கல்வீசித் தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.