கோவை: தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவலால் கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பு பணி மற்றும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எல்லைப் பகுதிகளில் இருந்து நகர்புறங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக வெளியான ரகசிய தகவலின் பேரில் போலீசார் தணிக்கைச்சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் கேரளாவில் இருந்து ஆனைக்கட்டி வழியாக கோவை வரும் அரசு பேருந்தை ஆனைக்கட்டி வனத்துறை தணிக்கைச்சாவடியில் கியூ பிரிவு போலீசார் திடீரென தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பேருந்துக்குள் இருந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை மடக்கிப் பிடித்த போலீசார் அவரை கைது செய்து மறைமுக இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட இந்த பெண் மாவோயிஸ்ட் மீது கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவர் எந்த குழுவைச் சேர்ந்தவர், இவர் மீது எந்தெந்த மாநிலத்தில் வழக்குகள் உள்ளது, அதேபோல, யாரை சந்திப்பதற்காக சென்று கொண்டிருக்கிறார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.