கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புகை மூட்டத்தினால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புகை மூட்டத்தினால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் கோவை நகரில் சேரும் 1000 டன் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்காக தனித்தனி மையங்கள் இருந்தாலும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 900 டன் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து மறு சுழற்சி செய்யப்படுகிறது. மேலும், தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மலை போல் குவிக்க வைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் இதனை வேறு இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பற்றியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து போர்கால அடிப்படையில் தீ அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.