கோவை: தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகம் எழுகின்றது, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பினார்.
கோவை: தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகம் எழுகின்றது, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பினார்.

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது "சி.ஏ.ஏ உட்பட போராட்டங்களுக்கு காவல் துறையிடம் அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் நடத்திக்கொள்ள வாய்மொழியாக அனுமதி கொடுத்து விட்டு பின்னர் வழக்கு போடுகின்றனர்", என குற்றம் சாட்டினார்.
"தென்காசியில் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என அனுமதி மறுத்து விட்டு, வாய்மொழியாக நடத்திக்கொள்ளுங்கள் என காவல் துறை சொல்கின்றது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்துரிமை காவல் துறையால் மறுக்கப்படுகின்றது", என தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் அரசியல் பேசி இருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும்.
வேளாண் பாதுகாப்பு மண்டலம் காலம் கடந்து அறிவித்து இருந்தாலும் கூட அதை சிபிஐ கட்சி வரவேற்கின்றது. வேளாண் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தேர்விக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
"ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்பதை முதல்வர் விளக்கவேண்டும்", என்றார்.
14 ம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானத்தை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளிலும், நகர் புற உள்ளாட்சி தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என்று கூறி அவர், அச்சத்தின் காரணமாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகின்றது, எனவே உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு குறித்து கேட்ட போது, பதிலளித்த அவர், அந்த உயர் பொறுப்பில், மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தொடர்புண்டு. இப்போது சுண்டெலிகள் மட்டும் சிக்கியுள்ளனர், பெருச்சாளிகள்கள் இன்னும் சிக்கவில்லை. அதனால், இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும். பணம் இருந்தால் வேலை வாங்கலாம் என்பதை இந்த முறைகேடு காட்டியிருக்கின்றது, என குற்றம் சாடினார்.
எஸ்.சி, எஸ்.டி பதவி உயர்வு இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு கவலைக்குரியது. சமூக நீதிக்கு எதிரானது. நாடாளுமன்றம் இதில் தலையிட வேண்டும் சமூக நீதி மறுக்கப்பட கூடாது, என தெரிவித்தார்.
பாரதிய ஜனதாவின் உட்பிரிவுகளான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி , இந்து முன்னணி போன்றது வருமான வரித்துறையை, பா.ஜ.க சொல்வதை கேட்காதவர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது, என சாடினார்.
"வட்டிக்கு கொடுக்க அனுமதி பெறவேண்டும். அதை நடிகர் ரஜினி பெற்று இருக்கின்றாரா? அதை ரஜினியும் விளக்க வேண்டும். மாநில அரசும் விளக்க வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதற்கு எதிராக காவல்துறையினர் ரசிகர்களை அடித்து விரட்டுகின்றனர், என தெரிவித்தார்.
"77 கோடி பணம், 300 கோடி ஆவணங்கள் அன்புசெழியனிடம் இருந்து கைபற்றபட்டதாக சொல்கின்றனர். அன்பு செழியனிடம் இருக்கும் பணம் "ப" என்பவரின் பணம் மற்றும் "உ" என்பவரின் பணம் என்று நாளிதழ்களில் சொல்கின்றனர். அந்த "ப" மற்றும் "உ" மீது வருமான வரித்துறை ஏன் விசாரிக்க வில்லை..?", என மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.