கோவை: இந்தியாவின் கொரோனா வைரஸ் என்பது பா.ஜ.க அரசு தான் எனவும் திரைப்படங்களில் பா.ஜ.கவை விமர்சிக்கும் விஜயின் வாயை அடைக்க வருமான வரி சோதனைகள் போன்ற நடவடிக்கையினை மத்திய அரசு மேற்கொள்கின்றது என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை: இந்தியாவின் கொரோனா வைரஸ் என்பது பா.ஜ.க அரசு தான் எனவும் திரைப்படங்களில் பா.ஜ.கவை விமர்சிக்கும் விஜயின் வாயை அடைக்க வருமான வரி சோதனைகள் போன்ற நடவடிக்கையினை மத்திய அரசு மேற்கொள்கின்றது என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி பொய் செல்கின்றார் எனவும் குடிமக்கள் பதிவேட்டிற்கும் மக்கள் நலத் திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய அவர், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் காரணம் என்று பா.ஜ.க சொல்வது தவறானது எனவும் குடியுரிமை திருத்தச் சட்டம் யாரையும் பாதிக்காது என்றால் அந்த சட்டமே தேவையில்லை என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியாவின் கொரோனா வைரஸ் என்பது பா.ஜ.க அரசு தான் எனவும், மத்திய பா.ஜ.க அரசின் நிதிநிலையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் வரும் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை கண்டன இயக்கங்கள் நடைபெற இருக்கின்றது என தெரிவித்தார். நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் வருமான வரி சோதனைகளை எதிர்க்க வில்லை. ஆனால், அது நடத்தப்பட்ட முறை சரியில்லை என தெரிவித்தார்.
நடிகர் விஜய் தீவிரவாதி கிடையாது என கூறிய அவர், சம்மன் கொடுத்தால் ஆஜராகி விளக்கம் கொடுக்க போகின்றார் எனவும் நடத்தப்பட்டது வருமான வரி சோதனையை போல தெரியவில்லை எனவும் நடிகர் விஜய் பா.ஜ.கவை தனது திரைப்படங்களில் விமர்சித்து இருக்கின்றார் எனவும் விஜயின் வாயை அடைக்க இது போன்ற நடவடிக்கையினை மத்திய அரசு மேற்கொள்கின்றது என தெரிவித்தார். ஏற்கனவே இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பல வருமான வரி சோதனைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என கூறிய அவர், வேண்டியவர்களுக்கு ஒரு அணுகுமுறையும், வேண்டாதவர்களுக்கு ஒரு அணுகுமுறையும் வருமான வரித்துறை கையாள்கின்றது என்று கூறினார்.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக அமைச்சரா? ஆர்.எஸ்.எஸ் அமைச்சரா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டும் என கூறிய அவர் , இந்துத்துவ அமைப்புகளை போல அவர் பேசி வருவதாகவும் பிரிவினையை தூண்டும் விதமாக பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நீலகிரியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி சிறுவனை காலில் உள்ள செருப்பை கழட்டச் சொல்கின்றார் எனவும் இது ஆணவத்தின் உச்சம் எனவும் தற்போது மாணவனின் பெற்றோரை அழைத்து அவர் சமரசம் பேசுகின்றார் என கூறிய அவர், வேறு யாராவது இது போன்று செய்து இருந்தால் காவல்துறை இப்படி சமரசம் பேசுமா? எனவும் கேள்வி எழுப்பினார். பழங்குடி மாணவனையும், அவரது பெற்றோரையும் மிரட்டி, சமரசப்படுத்தி புகாரை திரும்பப்பெற முயல்கின்றனர் என கூறிய அவர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் அடுத்தடுத்து சர்ச்சைகளுக்குள்ளாகி வரும் நிலையில், இவை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் பா.ஜ.கவின் குரல் எடுபடாத நிலையில் ரஜினியின் குரல் மூலம் பா.ஜ.க நினைத்ததை செய்ய முயல்கிறது என கூறிய அவர், அமித்ஷா, மோடியின் குரலாக ரஜினி பேசுகின்றார் எனவும் நேரடியாக ரஜினி எங்களுடன் விவாதிக்க தயாரா? எனவும் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மேலும், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநர் அலுவலகமும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என தெளிவான தீர்ப்பை வழங்கி விட்டது எனவும், மாநில அரசும் தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பி விட்டனர் என தெரிவித்தார். ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றார் என கூறிய அவர், இந்த விவகாரத்தில் இனியும் காலம் கடத்துவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லாம் என கூறிய அவர், 7 பேர் விடுதலையில் யாருமே அக்கறை இல்லாமல் இருக்கின்றனர் எனவும் ராஜீவ்காந்தி குடும்பத்தினரே பொது மன்னிப்பு கொடுத்த பின்னர், இன்னமும் அவர்கள் 7 பேரின் கருணை மனுவை கிடப்பில் போட்டு இருப்பது நியாயமல்ல எனவும் இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.