நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பழங்குடியின சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்டி விட சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில், தன்னுடைய பேரனை அழைத்து செருப்பை கழற்றச் சொல்வது போன்ற எண்ணத்தில் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று யானைகள் முகாமை பார்வையிட சென்றார். அப்போது, அவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்டி விடும் படி கூறினார். இந்த சம்பவத்தின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த படக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தான் தன்னுடைய பேரனை அழைத்து செருப்பை கழற்ற சொல்வது போன்ற எண்ணத்தில்தான் கூறினேனே தவிர, எந்த விதமான உள்நோக்கமும் தனக்கு கிடையாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் இவர் அதிகார தோரணையில், டேய் வாடா.. வந்து என் செருப்பை கழட்டி விட்டுடா.. என்று கூறும் வார்த்தைகள் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் போன்று ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இருக்கின்றனர் எனவும் அமைச்சர்கள் தங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.