கோவை: கோவையை அடுத்த சூலூர் முத்துக்கவுண்டன் புதூரில் மாசு ஏற்படுத்தி வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் ஆலையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையை அடுத்த சூலூர் முத்துக்கவுண்டன் புதூரில் மாசு ஏற்படுத்தி வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் ஆலையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கோவை சூலூர் அருகில் உள்ள முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் கழிவால் நீர், காற்று போன்ற முக்கிய நிலைகள் மாசு ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை நுரையீரல் பாதிப்பு மூச்சுத்திணறல் போன்ற நோயால் பாதிப்படைந்து வருவதாகவும், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பேசுகையில், தொடர்ந்து பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் தங்களை அலைகழிப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.