கேரளா: கொரோனா வைரஸ் தொடர்பாக 24 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதில், 18 பேருக்கு வந்த முடிவில் 17 பேருக்கு எந்த வைரஸ் தொற்றும் இல்லை என கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.
கேரளா: கொரோனா வைரஸ் தொடர்பாக 24 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதில், 18 பேருக்கு வந்த முடிவில் 17 பேருக்கு எந்த வைரஸ் தொற்றும் இல்லை என கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளா மாணவியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், இந்த நோய் வேறு யாருக்கும் பரவவில்லை, எனவும் கேரளா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தலைமையில் மருத்துவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் , விவசாயத்துறை அமைச்சர் B.S.சுனில்குமார் , உள்ளாட்சி துறை அமைச்சர் A.C.மொய்தீன் , கல்வித்துறை அமைச்சர் C.ரவீந்தரநாத், திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷாநவாஸ், மற்றும் சுகாதார துறை செயலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளா மாணவியின் உடல்நிலை குறித்து கேரளா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அவர்கள் திருச்சூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் வேறு யாருக்கும் பரவவில்லை. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
சீனாவில் இருந்து தற்போது வரை மாநிலம் முழுவதும் சேர்த்து 1471 பேர் வந்துள்ளனர். இதில் 50 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ள 1421 பேர் வீடுகளில் இருந்தபடியே தனிமைப்படுத்தப்பட்டு, உடல்நிலையின் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் 15 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல, கொரோனா வைரஸ் வேறு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கைக்காக சிறு அறிகுறிகள் உள்ள அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது வரை 24 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்க்கு அனுப்பபட்டுள்ளது.18 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன. 17 பேருக்கு எந்த வைரஸ் தொற்றும் இல்லை என்றும், அந்த ஒரு மாணவிக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளாதகவும் முடிவு வந்துள்ளது.
மேலும் 2706 பேருக்கு கொரோனா வைரஸ் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த அறிகுறிகள் இருந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தால் ஆம்புலன்ஸ் வைத்து பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள்.
அதேபோல, கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பிய 3 பேர் மீது சைபர் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர், எனவும் தெரிவித்தார்.