கோவை: தென்னை நார் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அடுத்து பொள்ளாச்சி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தென்னை, வாழை பயிர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: தென்னை நார் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அடுத்து பொள்ளாச்சி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தென்னை, வாழை பயிர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது தொடர்பாக அவர்கள் கூறுகையில், தங்களது பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட மஞ்சி மில்கள் இயங்கி வருவதாகவும் இதில் இருந்து வரும் தூசிகள் பயிர்கள் மீது படிந்து விடுவதாக தெரிவித்தனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறிய அவர்கள், பனி காலங்களில் வெள்ளை ஈ,மற்றும் பூச்சிகள் பரவி பயிர்கள் சேதம் அடைவதாக தெரிவித்தனர்.
தென்னை நார் கழிவுகளால் அப்பகுதியில் தண்ணீர் மாசுபட்டு கால்நடைகள் தண்ணீர் குடிப்பதில்லை எனவும் அங்குள்ள குடிநீர் வாரிய மேல்நிலை தொட்டியிலும், மஞ்சி கழிவு துகள்கள் பரவி உள்ளதால் பொதுமக்களும் தண்ணீர் குடிக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்த அவர்கள், இப்பகுதியில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதாக கூறினர்.
மேலும், விவசாய நிலங்கள் அருகில் மஞ்சிகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றனர். விவசாயம் தேசத்தின் முதுகெலும்பு என கூறும் அரசுகள் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காதது வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.