கேரளா: கேரள மாநில திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஷைலஜா தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கேரளா: கேரள மாநில திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஷைலஜா தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டதையடுத்து நோய் தடுப்பு சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க அதிகாரிகள் குழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது 9 பேர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், சீனாவிலிருந்து வீடு திரும்பிய கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை இன்று காலை திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றாலும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாணவியை கண்காணிக்க 5 மருத்துவர்கள் 20 செவிலியர்கள் கொண்ட குழு தனிப்பிரிவில் அமர்த்தப்பட்டுள்ளது. தற்போது திருச்சூர் மருத்துவ கல்லூரியில் 20 அறைகள் கொண்ட தனிப்பிரிவு துவங்கப்பட்டு எந்த நேரத்திலும் சந்தேகத்திற்குரிய நோயாளிகள் வந்தால் சிகிச்சையளித்து கண்காணிப்பதற்கு தயார் நிலையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து திருச்சூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஷைலஜா தலைமையில் தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயத்துறை அமைச்சர் B.S.சுனில்குமார், உள்ளாட்சி துறை அமைச்சர் A.C.மொய்தீன் , கல்வித்துறை அமைச்சர் C.ரவீந்தரநாத், திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷாநவாஸ், மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர்.