கோவை: சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி, கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி, கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, சூயஸ் குடிநீர் உரிமையை ரத்து செய்யக்கோரியும் குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிட கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பந்தயசாலை காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசை கண்டித்தும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும், குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வார்டு வாரியாக குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதால் சுகாதார சீர்கெடு ஏற்படுவதோடு, தொற்று நோய்கள் பரவும் எனவும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குப்பை அள்ள பணம் வசூல் செய்யப்படுவதாகவும் ஆனால், மாநகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றுவது இல்லை என கூறிய நா.கார்த்திக், இத்திட்டங்களை கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படுமென தெரிவித்தார்.

மேலும், காவல்துறை ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கும் கூட ஆளும்கட்சி நிர்ப்பந்தம் காரணமாக அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டிய நா.கார்த்திக், காவல் துறையினர் இதே போக்கினை கடைபிடித்தால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றார். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.