நீலகிரி: 71வது குடியரசு தின விழாவையொட்டி இன்று உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நீலகிரி: 71வது குடியரசு தின விழாவையொட்டி இன்று உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தி இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் 71வது குடியரசு தின விழா உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.

தேசியக் கொடியை ஏற்றியபின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் ரூ.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அரசு அலுவலர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் சான்றுகள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் நீலகிரி மாவட்ட பழங்குடி இன மக்களான தோடர் இன பெண்களின் பாரம்பரிய நடனமும் மற்றும் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும் இடம்பெற்றன. மேலும் குடியரசை போற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.