கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் தயாரித்ததாக எழுந்த புகாரில் இன்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் தயாரித்ததாக எழுந்த புகாரில் இன்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 1989-ல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் கே.சி.பழனிச்சாமி எம்.பி.யாக தேர்வானார். இதைதொடர்ந்து காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவர் கட்சி விரோத நடவடிக்கைக்காக அதிமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை திடீரென கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சூலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் கே.சி பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல, கைதுசெய்யப்பட்ட அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 417 - ஏமாற்றுதல், 418 - நம்பியவர்களை ஏமாற்றுதல், 419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், 468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், 479 - சொத்து குறியீட்டைத் தவறாக பயன்படுத்துதல், 481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல், 482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கான தண்டனை, 485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருத்தல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சூலூர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்களை காவல் நிலைய வளாகத்திற்குள் வர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் கே சி பழனிச்சாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் அதிமுகவில் பொறுப்பு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளதையடுத்து மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் முடிவில் அவர் சூலூர் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என கே.சி,.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.