கோவை: கோவையில் தீத்திபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் தனது ஊரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை: கோவையில் தீத்திபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் தனது ஊரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோவை தீத்திபாளையம் ஊராட்சிக்கு தலைவராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புல்லட் கந்தசாமி. இவர் தேர்தல் வாக்குறுதியாக பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக தூய்மையான ஊராக மாற்றுவேன் என உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், தமது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தீத்திப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற இவர், நேரடியாக சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். இவரது இந்த செயலை பார்த்த ஊர் மக்கள் அவரை வெகுவாக பாராட்டி சென்றனர்.

மேலும், தமிழகத்திலேயே வரி பாக்கியில்லா, பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இந்த பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக தீத்திபாளையம் ஊராட்சியை விரைவில் மாற்றி காட்டுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு முன்பும் இவர் தான் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.