கோவை: கோவை அடுத்த பூலூவாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே வைத்த கொடிக்கம்பம் இருந்த இடத்தில் மீண்டும் அவர்களின் கம்பத்தை வைக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒன்றுகூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை அடுத்த பூலூவாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே வைத்த கொடிக்கம்பம் இருந்த இடத்தில் மீண்டும் அவர்களின் கம்பத்தை வைக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒன்றுகூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பூலுவாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் கலர் பூசி மீண்டும் அதேபகுதியில் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கம்பத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடியேற்றி மரக்கன்றுகளை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கொடி கம்பத்தை அகற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மேலும் போலீசார் நாம் தமிழர் கட்சியின் கம்பத்தை அகற்ற வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமையின் வழிகாட்டலின் பேரில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூலூவாம்பட்டி பேருந்து நிறுத்த கொடிக்கம்பம் அருகே ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் கம்பம் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்கும் படியும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாம் தமிழர் கட்சியினர் கொடிக்கம்பம் வைக்க ஒன்றுகூடிய நிலையில் அப்பகுதி மக்களும் இந்து அமைப்பினரும் ஒன்று கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பகுதியில் குவிந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் விஜயராகவன் கூறும்போது ;-
ஏற்கனவே வைக்கப்பட்ட கொடிக்கம்பம் இருந்த இடத்தில் மீண்டும் எங்களது கொடிக்கம்பத்தை வைக்க நாங்கள் முறைப்படி காவல்துறையின் சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காக பேரூராட்சியில் அனுமதி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.
எங்கள் கொடிக்கம்பத்தை வைக்க மறுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. கொடிக்கம்பத்தை வைப்பதற்கு என்று எந்த சட்டங்களும் இல்லாதபட்சத்தில் வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சி இந்த பகுதியில் செயல்படக்கூடாது என்ற காரணத்திற்காக இந்து அமைப்பினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். அதற்கு அனைத்து துறையும் ஆதரவு தருகிறது. அதேபோல், மாற்று மொழியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சி அந்தப்பகுதியில் செயல்படக் கூடாது என்ற நோக்கத்தோடு அரசியல் செய்கின்றனர். மேலும், கொடிக்கம்பம் நடவு தொடர்பாக ஒழுங்கு விதிமுறைகளை விதிக்க நாம்தமிழர்கட்சி உயர்நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளது எனவும் தெரிவித்தார்.