கோவை: கடந்த ஆண்டை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பு 19.3 சதவீதம் குறைந்துள்ளதாக 31வது சாலை போக்குவரத்து வார விழாவை துவக்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
கோவை: கடந்த ஆண்டை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பு 19.3 சதவீதம் குறைந்துள்ளதாக 31வது சாலை போக்குவரத்து வார விழாவை துவக்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.

சுமார் 600க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பங்கேற்ற இந்த பேரணி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அவினாசி சாலை, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, காந்திபுரம் வழியாக வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் சாலைகளில் சாகசம் வேண்டாம், மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்க்கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் காவல்துறையினர், அதி விரைவு படை, அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து வார விழாவை முன்னிட்டு நாளை வாக்கத்தான் நிகழ்ச்சி, நாளை மறுதினம் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது எனவும் விதிமுறைகள் மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கடந்த ஆண்டை விட19.3 சதவீதம் சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்து உள்ளது என்றார்.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளால் 560 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் இந்த ஆண்டு 452 ஆக குறைந்து உள்ளது என்றவர், வரும் ஆண்டு உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் விதிமுறை மீறிய 3400 மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர், தனியார் வாகனங்கள் மீது வரும் புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தொடர் தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சுமித் சரண், மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா, லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலிய பெருமாள், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல், தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.