கோவை: மஞ்சள் கரும்புகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்க வந்த நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை: மஞ்சள் கரும்புகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்க வந்த நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மஞ்சள் செடி மற்றும் கரும்புகளுடன் வந்திருந்தவர்கள், தங்களது சங்கம் சார்பில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு விவசாயிகளின் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

அந்த மனுவில் நாட்டு மாடுகள், மானிய விலையில் தீவனங்கள் விவசாயிகளுக்கு அரசு இலவசமாக வழங்கிட வேண்டும், கள் இறக்க அனுமதி, ஏழை விவசாயிகள் இலவச மின்சாரம் கிடைக்கப் பெறும் வகையில் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை வசூலிக்காமல் வழங்கிட வேண்டும், சூரிய சக்தி மூலம் மின் மோட்டர்களை இயக்க சோலார் பேனல் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் தங்களது பொங்கல் வாழ்த்துகளை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்த அவர்கள், மஞ்சள் மற்றும் கரும்புகளை அவருக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் சண்முகம், தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து உள்ளதாகவும் உயர்மின் கோபுரம் அமைக்கும் போது முழு இழப்பீடு தொகையும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்றார்.
உயர்மின் கோபுரங்களால் விவசாயம் பாதிக்கப்படும் என தொடர்ந்து தாங்கள் கூறி வருவதாகவும் அதையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஐந்து மடங்கு இழப்பீடாக வழங்கிட வேண்டும் எனவும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் போது விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இருக்கும் பட்சத்தில் நிலங்களை ஒப்படைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.