கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் அலுவலகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை செல்வபுரம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் அலுவலகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (56). இவர் செல்வபுரம் அருகே உள்ள குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பன்னீர் செல்வி(50) என்ற மனைவியும் பிரியா(23) என்ற மகளும், ஆனந்த்(19) என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் ரவி தினமும் இரவு வீட்டுக்கு செல்வது வழக்கம். ஆனால், நேற்று இரவு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ரவி தனக்கு இரவு வேலை உள்ளதாக தெரிவித்துவிட்டு அலுவலகத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், அலுவலக கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அப்போது, ரவி தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அலுவலக உதவியாளர் ரவிக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.