கோவை: கேரளாவிலிருந்து காரை கடத்தி வந்து மாணவியை படுகொலை செய்த கேரள வாலிபரை வால்பாறை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கேரளாவிலிருந்து காரை கடத்தி வந்து மாணவியை படுகொலை செய்த கேரள வாலிபரை வால்பாறை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரளாவில் இருந்து கார் கடத்தப்பட்டு வந்துள்ளதாக வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் வாகன சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டன. வால்பாறை பொள்ளாச்சி சாலையிலுள்ள வாட்டர்பால் அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இரத்தக்கரை இருந்ததை கண்டறிந்த காவல் துறையினர் காரை ஓட்டி வந்த எர்ணாகுளம் ஷாஜகான் மகன் சபீர் (21) என்பவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் வாட்டர் சர்வீஸ் நிலையத்திலிருந்து காரை கடத்தி வந்து அதே பகுதியிலுள்ள வினோத் மகள் ஈவா ஆண்டனி என்ற 17 வயது பள்ளி மாணவியை கடத்தி வந்து கொலை செய்ததாகவும் சடலத்தை சோலையார் அணை சாலையிலுள்ள வறட்டுப்பாறை பகுதியில் காப்பி காட்டில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, வால்பாறை காவல்துறையினர் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வறட்டுப்பாறை யு பென்ட் அருகில் காப்பி காட்டில் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரள காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரள மாநில காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கேரள மாநிலம் சாலக்குடிக்கு கொண்டு சென்றனர். மேலும், பிடிபட்ட சபீரை வால்பாறை காவல்துறையினர் கேரள காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.