கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் பணியாளர்கள் உடைமாற்றும் அறையில் இரகசிய கேமிரா வைத்த சம்பவத்தில் சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவை தடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் பணியாளர்கள் உடைமாற்றும் அறையில் இரகசிய கேமிரா வைத்த சம்பவத்தில் சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவை தடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் கணவர் மணிகண்டன் சந்தேகத்துக்குரிய நபரான சூப்பர்வைசர் சுபாஸ் மீது நிர்வாகத் தரப்பில் புகார் தெரிவித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்பு சமரசம் செய்யப்பட்டது. அதேசமயம், ரகசியமாக உடைமாற்றும் அறையில் கேமராவை வைப்பதையும், ரெக்கார்ட் செய்த வீடியோக்களையும் சவிதாவின் கணவர் மணிகண்டன் ஆதாரமாக சேமித்து வைத்திருப்பது நிர்வாக தரப்புக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று மணிகண்டன் வைத்துள்ள ஆதார வீடியோக்களை அழிக்கும்படி நிர்வாகத் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மணிகண்டன் வீடியோவை அழிக்க மறுத்ததால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த காவல் துறையினர் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ராதிகா கூறும்போது;-
பெண்களின் வீடியோக்களை எடுத்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகாரளித்தாலே நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் காவலன் ஆப் மூலம் எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.