நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்பட்டராயர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்பட்டராயர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த பண்டிகையில் ஏராளமான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களது குலதெய்வத்தை வழிபட்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டிற்கான பண்டிகை கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோத்தர் இன மக்கள் வசிக்கும் கிராமமான புது கோத்தகிரியில் பிறைகழித்தல் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.
இந்த நிகழ்வின் முக்கிய நாளான இன்று காலை புது கோத்தகிரி மக்கள் அனைவரும் தங்களது கலாச்சார பாரம்பரிய உடையணிந்து கோத்தகிரியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஊர் பூசாரிகள் 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடைதிறக்கப்பட்டு தீபம் ஏற்றி தூபம் காட்டி கம்பட்டராயரை வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து, கோத்தர் இன மக்கள் அனைவரும் முன்னோர்களை வழிபட்ட பிறகு கோவிலின் முன்புறம் உள்ள நடுகல்லை சுற்றி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்விற்குப் பின் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோவில் மீண்டும் பூட்டப்பட்டது.