நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமைகள் கூட்டம் புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சித் தலைவர், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குன்னூரில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியிலும், கோத்தகிரியில் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்பட்டு வருகிறது. தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமைகள் கூட்டம் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பெட்டிகள் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் வாக்கு எண்ணும் மையம் அருகே 10க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அதிரடிப் படை, காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.