கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 3 மேம்பாலங்களில் இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 3 மேம்பாலங்களில் இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்கள் நிகழாமலும், பொதுமக்கள் அனைவரும் புத்தாண்டை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட மாநகர காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, வரும் ஆண்டை விபத்தில்லா ஆண்டாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கோவை மாநகரம் முழுவதும் விபத்து பகுதிகள் கண்காணிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும், இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மாநகரின் பல்வேறு முக்கியமான பகுதிகளில் 44 இருசக்கர வாகன ரோந்து வாகனமும், 26 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், 400 மாநகர ஆயுதப்படை காவலர்கள், 80 சிறப்பு காவல் படை காவலர்கள், 150 ஊர் காவல்படையினர் உட்பட மொத்தம் 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்வாறு வேகமாக வாகனங்களை ஓட்டி வருபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் ஆகியோர்களை NGO-க்கள் உதவியுடன் அவினாசி சாலை சிக்னல்களிலும், பந்தயசாலையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள 25 முக்கியமான வாகன தணிக்கை இடங்கள், 11 வாகன சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும் வகையில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மேம்பாலங்களை தங்களது சாகச பயண தளமாக குறிவைக்கும் வாகன ஓட்டிகளின் உயிர்களை பாதுகாக்க மேம்பாலங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அவினாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம் போன்ற மேம்பாலங்களில் இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேம்பாலங்களின் நுழைவு பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.