திருப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
திருப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குடியுரிமை சட்டங்கள் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும், மோடி, அமித்ஷாவுக்கும் கோஷமிட்டபடி வந்து அவர்களின் உருவபொம்மையை எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த உருவ பொம்மையை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதனால் போலீசாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ரியாஜூத்தின் பேசுகையில், இந்தியத் திருநாடு ஒரு ஜனநாயக நாடு, இங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சகோதரத்துவ உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது மத்தியில் ஆண்டு வரும் பாசிச பாஜக அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான ஒன்றாக உள்ளது. இந்த நாட்டிற்கு வருபவர்கள் அனைவரும் அரவணைக்கப் படுவார்கள், ஆனால் முஸ்லிம்கள் மட்டும் புறக்கணிக்கப் படுவார்கள் என்ற மோசமான ஒரு சட்டத்தை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது, மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று திருப்பூரில் இந்த மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லாவிடில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ ஆலோசகர் அப்துல் கரீம், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாரிஸ், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ரியாஜூத்தின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.