கோவை: கோவை எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் சார்பில் நடைபெற்ற கால்நடை கண்காட்சி மற்றும் திருவிழாவில் இடம் பெற்ற 700 காளைகள், 200 குதிரைகள் 400 சேவல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பொது மக்களையும் விவசாயிகளையும் கவர்ந்தது.
கோவை: கோவை எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் சார்பில் நடைபெற்ற கால்நடை கண்காட்சி மற்றும் திருவிழாவில் இடம் பெற்ற 700 காளைகள், 200 குதிரைகள் 400 சேவல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பொது மக்களையும் விவசாயிகளையும் கவர்ந்தது.

இந்த கால்நடை கண்காட்சி மற்றும் திருவிழாவையொட்டி மகா சண்டியாகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ் பி வேலுமணி, எம்எல்ஏ சண்முகம், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மருதாசல அடிகளார், தென்சேரிமலை முத்து சிவ ராமஸ்வாமி அடிகளார், பிள்ளையார் பீடம் மணிவாசக அடிகளார் உள்ளிட்ட பலர் மகா சண்டி யாகத்தில் பங்கேற்றனர். இந்த எல்லை மாகாளியம்மன் விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாக அறங்காவலர் கண்ணன் செய்திருந்தார்.
திருவிழா குறித்து நிர்வாக அறங்காவலர் கண்ணன் கூறுகையில், பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நூறாண்டு பழமையான எல்லை மாகாளியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் கால்நடை கண்காட்சியானது ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது என்றார்.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கால்நடைத் திருவிழா கண்காட்சியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து பூச்சி காளைகள், காங்கேயம் காளைகள், மாட்டினங்கள், ரேக்ளா வண்டிகள், சேவல் இனங்கள், சிறந்த கால்நடைகள், குதிரைகள், சேவல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் விவசாயத்தை ஊக்குவிக்கவும் புதிய தலைமுறை விவசாயத்தில் ஆர்வம் காட்ட செய்யவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.

இந்த கால்நடை கண்காட்சி மற்றும் திருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர் அனைவருக்கும் கோயில் வளாகத்தில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டன. கால்நடை திருவிழாவை காண்பதற்கு கோவையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்று ரசித்தனர்.