கோவை: ஆன்லைன் வர்த்தகம் காரணமாக தற்போது 30 விழுக்காடுகளாக வீழ்ந்து உள்ள சில்லறை வணிகம், விரைவில் 50 விழுக்காடுகளாக உயரும் என கோவையில் வணிகர் சங்க மண்டல தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கோவை: ஆன்லைன் வர்த்தகம் காரணமாக தற்போது 30 விழுக்காடுகளாக வீழ்ந்து உள்ள சில்லறை வணிகம், விரைவில் 50 விழுக்காடுகளாக உயரும் என கோவையில் வணிகர் சங்க மண்டல தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் 700 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இருதயராஜா முன்னிலை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வணிகர் சங்க மண்டல தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ஆன்லைன் வர்த்தகம் காரணமாக இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருவதாகவும் ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 30 விழுக்காடு சிறு வணிகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இது 50 விழுக்காடுகளாக உயரும் என்றார்.

பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனம் இந்திய துணைக் கண்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் நிலையில் தாங்கள் நஷ்டத்தில் வியாபாரம் செய்து வருவதாகவும், சில்லறை வணிகத்தை முடக்கும் நோக்கில் இந்திய பொருளாதாரத்தை சீரழித்து அனைத்து வணிகத்தையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெப்சி, கொக்கோ கோலா குளிர் பானங்கள் எப்படி சுதேசி குளிர்பான விற்பனையை அழித்ததோ, அதே நோக்கில் சில்லறை வணிகத்தை தள்ள முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், வேலை வாய்ப்புகள் தரும் சில்லறை வணிகமும், விவசாயமும் அழிகின்ற நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு இருப்பதாகவும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.