கோவை: கோவை அடுத்த சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் சித்திரவதை படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அடுத்த சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் சித்திரவதை படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கேம் ராம்சிங் கோவை திருச்சி சாலையில் உள்ள சூலூர் விமான தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்கள் அதே பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பும், மற்றொருவர் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேம் ராம் சிங்கின் மகன்களை குறும்பு செய்ததாகவும், செல்போன் பயன்படுத்தியதாகவும் கூறி அப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக அடித்து உடல் மற்றும் மனரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அம்மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் தாயார் சீமா குமாரி கூறும்போது:-
வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற எனது பெரிய மகனை பள்ளியின் முதல்வர் மேகநாதன், கால்சட்டையை கழட்டச் சொல்லி பின்புறம் அடித்து, பல்வேறு சித்திரவதை செய்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம். மேலும் எனது இரு மகன்களையும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துகின்றனர். இப்பிரச்சனை தொடர்பாக என் பிள்ளைகளை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர்களை தேற்ற முடியவில்லை என கூறினார்.
மேலும், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொடூரங்கள் தொடர்பாக மேல்மட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் பயனில்லை. அதேபோல எனக்கு இந்தியை தவிர வேறு மொழி தெரியாததால் இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை என்றார் .
இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 11ம் வகுப்பு மாணவன் கூறும்போது;-
பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகநாதன் எங்கள் இருவரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றி தனி அறைக்கு அழைத்து சென்றார். பின்னர் ஆசிரியர்கள் தமிழரசி, திவ்யா ஆகியோர் எனது கைகளை பிடித்துக்கொள்ள தலைமை ஆசிரியர் மேகநாதன் எனது மர்ம உறுப்பைப் பிடித்து இழுத்து காயம் ஏற்படுத்தினார். அதேபோல ஆசன பகுதியிலும் குத்தினார். இது எனக்கு அதிக வலியை ஏற்படுத்தியது. நான் அமைதியாக படிக்க விரும்புகிறேன் ஆனால் பள்ளியின் ஆசிரியர்கள் உடல் மற்றும் மன ரீதியாக என்னை துன்புறுத்துகின்றனர் எனக்கு ஒரு நீதி கண்டிப்பாக வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.