கோவை: கோவை அடுத்த பீளமேடு பகுதியில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய் மற்றும் நான்கு குழந்தைகள் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அடுத்த பீளமேடு பகுதியில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய் மற்றும் நான்கு குழந்தைகள் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாணி பவுடர், அரளி விதை, எலி மருந்து போன்ற பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகளை உண்டு தற்கொலைக்கு முயன்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 15க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு காரணங்களுக்காக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) மற்றும் அம்சவேணி (37) தம்பதியினர், கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சௌமியா (16), சத்யபிரியா (11), என்ற மகள்களும் மணிகண்டன் (10), சபரிநாதன் (7) என்ற மகன்களும் உள்ளனர். ஏழ்மையில் வாடிய கோவிந்தராஜின் இரண்டாவது மகள் சத்திய பிரியா, கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் பாதிப்பினால் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சையளிக்கும் அளவிற்கு போதிய பண வசதி இல்லாததால் இவர்கள் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கோவிந்தராஜ் பணி நிமித்தமாக வெளியூர் சென்ற போது, தாயார் அம்சவேணி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, அரளி விதையை அரைத்து தனது குழந்தைகளுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார். அப்போது உணவு அருந்திய குழந்தைகள், உணவு கசப்பாக இருப்பதாக தெரிவித்து அழுதுள்ளனர்.
இதனால் மனம் மாறிய அம்சவேணி, குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். இதனை தொடர்ந்து அம்சவேணி உட்பட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதாரத்துறையில் முன்னிலையில் இருக்கும் தமிழகத்தில் சிகிச்சை அளிக்க பண வசதி இல்லாததால் தாய் உட்பட குழந்தைகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.