கோவை: மேட்டுப்பாளையம் அருகே சுற்றுசுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பிற்காக நின்ற போலீசாருக்கும் அப்பகுதி இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சுற்றுசுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பிற்காக நின்ற போலீசாருக்கும் அப்பகுதி இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த டிசம்பர் 2ம் தேதி சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த பகுதியில் இன்னமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த சிவலட்சுமணன் என்ற இளைஞருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிவலட்சுமணனை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காயமடைந்த இளைஞர் சிவலட்சுமணனுடன் மூத்த வழக்கறிஞர் ரத்தினம், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரத்தினம், மேட்டுப்பாளையம் நடூரில் சிவலட்சுமணன் என்ற இளைஞரை காவல் துறையினர் அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர் எனவும் காவல் துறையினர் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார். 17 பேர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இன்னும் சேர்க்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், நடூரில் இளைஞர் சிவலட்சுமணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நடூர் பகுதியை இளைஞர் சிவலட்சுமணன், மரியாதை குறைவாக பேசிய காவல் துறையினரை, மரியாதையாக பேசுங்கள் என்று சொன்னதற்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தாக்கினர் என குற்றம்சாட்டினார். மேலும், குச்சியை வைத்து தாக்கியதில் கை விரல்களில் காயம் ஏற்பட்டு அசைக்க முடியவில்லை எனவும் காவல்துறை மனசாட்சியே இல்லாமல் தன்னை தாக்கியதாக கூறிய அவர், உடையை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நிற்க வைத்தும் கால்களினால் எட்டி உதைத்து போலீசார் தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் நடூரில் துக்கம்,சோகம் இன்னமும் நீங்காத நிலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்குள்ள இளைஞர்களை மிரட்டலுக்கு ஆளாக்கிக் கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார். மேலும், நடூர் இளைஞர் சிவலட்சுமணனை தாக்கிய காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் காயமடைந்த சிவலட்சுமணனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.