கோவை: கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து வயது பெண் குழந்தை மற்றும் எட்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து வயது பெண் குழந்தை மற்றும் எட்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது.
அதேபோல, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில், பருவமழையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் வேகமாக பரவி வந்தது.
குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகள் ஜெசிந்தா மேரி (5). இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடந்த மூன்றாம் தேதி மதியம் 2 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல, திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணனின் மகன் தர்ணிஷ்(8) காய்ச்சல் பாதிப்பினால் மேல் சிகிச்சைக்காக கடந்த 4ம் தேதி மதியம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.