கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுசுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய இயக்குநர் பா.ரஞ்சித், அதிகாரம் என்பது சாதி மன நிலையில் உள்ள ஆட்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பது இந்த நிகழ்வு காட்டுவதாக குற்றச்சாட்டினார்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுசுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய இயக்குநர் பா.ரஞ்சித், அதிகாரம் என்பது சாதி மன நிலையில் உள்ள ஆட்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பது இந்த நிகழ்வு காட்டுவதாக குற்றச்சாட்டினார்.
பின்னர் இது தொடர்பாக பேசிய பா. ரஞ்சித், காலையில் எழுந்ததும் தலித் மக்களை பார்க்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது, சாதி வெறி நவீன மையமாக மாறியுள்ளதை இந்த நிகழ்வு காட்டுகிறது என்றார்.

தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உணர்வுகளை கூட புரிந்துகொள்ள சமுதாயம் மறுப்பதாக கூறிய அவர், போராட்டங்களை தடுப்பதற்காகவே உயிரிழந்தவர்களின் உடலை உறவினரிடம் கூட கொடுக்காமல் அதை அவசர அவசரமாக ஒரே இரவில் எரியூட்டப்பட்டதாக கூறினார். மேலும், பத்து லட்சம் நிவாரணம், தகுதி உள்ளவர்களுக்கு வேலை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி என்ன என்பதை தீர்மானிப்பதிலும் சாதி நுட்பமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
சுவர் உரிமையாளர் மீது பதியப்பட்ட வழக்கானது வெறும் கண்துடைப்பு வழக்காக உள்ளது எனவும் வன்கொடுமை தடுப்பு சட்டம் பதிய பல முறை கோரிக்கை விடுத்தும் ஏன் மக்களின் மன நிலையை அரசு புரிந்துகொள்ள மறுக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற மற்றொரு சம்பவம் நடப்பதற்கு முன் தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம்சாட்டிய ரஞ்சித், இதற்கு நிரந்தர தீர்வு, தலித்கள் அரசியல் மையப்பட வேண்டும் என்றும் அப்போது தான் இது தடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது தடியடி வழக்கு, உரிமைக்காக போராட நினைக்கும் தலைவர்களை தாக்குவதால் தலித் போராட்டங்கள் ஒடுக்கப்படும் என திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் தாக்கும் போதும் கூட சாதி பெயரை சொல்லி அடித்து துன்புறுத்துவது, காவல்துறையே சாதி மன நிலையில் உள்ளதா என நினைப்பதாகக் கூறிய அவர், அதிகாரம் என்பது சாதி மன நிலையில் உள்ள ஆட்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பது இந்த நிகழ்வு காட்டுவதாக தெரிவித்தார்.