கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.11.2019) மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.11.2019) மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் ரூ.60.27 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை ரூ.22.67 கோடி மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த மானியத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காக பம்புசெட் அமைத்தல், நீர்த்தொட்டி அமைத்தல் மற்றும் நீர்க்குழாய்கள் வழங்குதல் போன்ற திட்டங்களையும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மின்சார துறையால் செயல்படுத்தப்படும் தட்கல் திட்டத்தின் கீழ் பதிவு செய்த மின் இணைப்புகளை விரைவாக முடித்திட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில், 42,250 ஹெக்டேரில் உணவு தானிய பயிர்கள் பயிரிடப்பட்டு அரசினால் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி மேம்பாட்டுத் திட்டம் உணவு தானிய உற்பத்தி திட்டங்கள் மானிய பயன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பழுதான நிலையிலிருந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அன்னூர், சர்க்கார்சாமக்குளம், வடசித்தூர், சோமனூர் புதுப்பிக்கப்பட்டும் கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டாரத்தில் புதிய விரிவாக்க மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நடப்பு ரபி பருவத்திற்கு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சாகுபடி செய்த பயிர்களுக்கு ஏற்றவாறு உரிய கடைசி தினத்திற்குள் முன்னதாகவே பீரிமியம் செய்யவேண்டும். மக்காச்சோளப்படைப்புழுவை கட்டுப்படுத்திட 1724 ஹெக்டேருக்கு 61.32 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1624 விவசாயிகள் பயன் அடையும் வண்ணம் பரந்த அளவில் மருந்து தெளிக்கப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் ரூ.340கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.278 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. பயிர்கடன் வசதி விவசாயிகளுக்கு சிரமமின்றி கிடைத்திட கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி தீர்வுகாண கோரிக்கை வைக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு இருப்பில் உள்ள சேமநல நிதி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில் முறையாக தீர்வு செய்திட நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது. மேலும், கால்நடைகள் கருவுற்றதை அறிந்து கொள்ள உதவும் ஸ்கேன் கருவி எண்ணிக்கை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வேளாண் பொறியில் துறை சார்பாக இயந்திர வாடகை மையம் அமைக்கவும், சோலார் உலர்த்திகள், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் விவசாயிகள் முன்வரவேண்டும். 50 பண்ணைக் குட்டைகள் தற்போது அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென்னையைத்தாக்கும் வெள்ளை ஈ தடுப்பு செய்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட உரிய ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், விவசாயிகளுக்கு தேவையான பப்பாளி விதைகளை வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் போதிய மழை பெய்துள்ள நிலையிலும், ஏரி குளங்கள் நிரம்பியுள்ள நிலையிலும் முறையாக விவசாயம் மேற்கொண்டு வருவாய் பெருக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட விவசாயிகளை கேட்டுக்கொண்டதுடன் அதற்கு வேளாண்/தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். மேலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முறையாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். என மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் சார்பில் சாமை சாகுபடி தொழில்நுட்பங்கள், சோளம் தொழில்நுட்ப கையேடு, குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள், ஆகிய கையேடுகளை வெளியீட்டு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், இணை இயக்குநர்(வேளாண்மை) சித்ரா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநர் உமாராணி, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம், உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.