கோவை: கோவை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகளில், ஒரு பகுதியாக தற்போது, உக்கடம் வாலாங்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்று, இந்த ஆய்வு தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகமே படத்துடன் , செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
கோவை: கோவை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகளில், ஒரு பகுதியாக தற்போது, உக்கடம் வாலாங்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்று, இந்த ஆய்வு தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகமே படத்துடன், செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதில், 'ஸ்மார்ட் சிட்டி பணிகளை, கமிஷனர் ஷ்ரவன் குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலையில் சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டார்' என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே , கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் எஸ்.பி.அன்பரசன் அத்து மீறி, அரசுப்பணிகளில் தலையிட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கிறார் என்று பேசப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பு உள்ளது, என திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாமல், மக்களின் பிரதிநிதியாகவும் இல்லாமல், ஸ்மார்ட் சிட்டி நிர்வாகியாகவும் இல்லாமல், அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவது, ஆய்வு நடத்துவது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலும் உள்ளது என குற்றம் சாடியுள்ளார்.
"ஒரு தனி நபர் அரசுப் பணிகளை ஆய்வு செய்வது என்பது, மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் பணி, கடமை, உரிமை மற்றும் அதிகாரத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மரபுகளுக்கு மாறாகவும் தலையிடுவதாகும். அரசுப் பணிகளை ஆய்வு செய்ய, சமூக ஆர்வலர் என்ற ஒற்றைத் தகுதி போதுமென்றால், கோவை முழுவதும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஏன் அழைக்கவில்லை?", எனவும் கேள்வி எழுப்பினார்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் உரிமைகள் பறிபோவது பற்றியோ, அரசு நிர்வாகத்தில் ஒரு தனி நபர் தலையிடுவது குறித்தோ எவ்வித கருத்தும் சொல்லும் முதுகெலும்பு இல்லாமல், கோவை மாநகராட்சி நிர்வாகம் ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இதை தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது என மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடினார்.
உள்ளாட்சித் துறை அமைச்சரின் சகோதரர் என்ற அடிப்படையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும், இது போன்ற ஆய்வுகளை உடனடியாகக் கைவிடுமாறும் அந்த விடுத்த அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
"ஆகவே, எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாமல், மக்களின் பிரதிநிதியாகவும் இல்லாமல் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சகோதரர் என்ற அடிப்படையில் அரசுப்பணிகளை ஆய்வு செய்வதையும் , அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதையும் கோவை மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இனியும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.