திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பூமலூர் பகுதியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பூமலூர் பகுதியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பூமலூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள்(75), தங்கம்மாள்(78). இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில், இவரது பிள்ளைகள் பணம் ஏதாவது வைத்துள்ளீர்களா என்று கேட்டதற்கு, ஆம் எங்களது இறுதிகால தேவைக்காக வைத்திருப்பதாக கூறி, அவர்களிடமிருந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால், அந்த 46 ஆயிரம் ரூபாயும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாத இந்த இரு மூதாட்டிகள் தங்களுடைய இறுதி கால தேவைக்காக, பல்வேறு வேலைகளுக்கு சென்று சிறுக சிறுக சேமித்த பணம் இப்படி செல்லாமல் ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அந்த இரு மூதாட்டிகளுக்கும் இன்று அரசின் சார்பில் உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் மூதாட்டிகள் வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாய் ( பழைய 500 மற்றும் 1000 ரூபாய்) பணத்தை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது என்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மூதாட்டிக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு மூதாட்டிகளுக்கும் அரசின் சார்பில் மாதாமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.