கோவை: கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
நம் நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் மாவட்டத் தொழில் மையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் மற்றும் மானியம் பற்றிய விளக்கவுரை அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி திட்ட பயனாளிகளின் அனுபவங்கள் குறித்தும் அவர்களின் நிறை குறை குறித்தும் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட போது, புதிதாக தொழில் துவங்குபவர்கள், நிதானமாக அனுபவமிக்கவர்களிடம் கேட்டறிந்து நல்ல பயிற்சியுடன் துவங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதேபோல, தொழில் முனைவோர் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் போது சரி செய்து தருவோம் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டம் தொழில் துறையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கோவையில் செயல்படும் தொழில் அமைப்புகள் பாரபட்சமின்றி ஒற்றுமையாக செயல்படுவதால், மாவட்டம் அமைதியாக முன்னேறி வருவதாக தெரிவித்த அவர், புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்கும் முன்பே முதலில் நம்மை நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அதற்கான தொழில் பயிற்சிகள் அரசின் சார்பில் கொடுக்கப்படுவதாக கூறினார்.
அதேபோல, புதிதாக தொழில் தொடங்கும் போது, முதலாளிகள் போல கனவு காணாமல் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றவர், மாதம்தோறும் கூட்டங்கள் நடத்த முயற்சி செய்து, அதன்மூலம் குறைகள் தீர்க்கப்படும் என்றார்.