கோவை: பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அந்த அமைப்பின் கெளரவ தலைவர் பழனிச்சாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தின் போது, ஏற்கனவே அரசு வாக்குறுதி கொடுத்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு பணிநிரந்திரம், காலமுறை ஊதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.9,000 ரூபாய் வழங்க வேண்டும்,சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய சத்துணவு ஊழியர்கள் உடனடியாக தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.