கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்ற இளைஞருக்கு போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் இடுப்பிலேயே இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்ற இளைஞருக்கு போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் இடுப்பிலேயே இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (26). காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இந்த இளைஞர் கடந்த 22ம் தேதி அதே பகுதியில் உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையிலிருந்த செவிலியர், மருத்துவர் ஆலோசனைப்படி தம்பிதுரைக்கு இடுப்பில் ஊசி போட்டுள்ளார். ஆனால், தம்பிதுரை ஊசி போட்ட இடத்தில் அதிக வலி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த தம்பிதுரை, தனக்கு போடப்பட்ட சிரஞ்சியை பார்த்தபொழுது உடைந்த நிலையில் இருப்பதை கண்டு செவிலியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் செவிலியர் அதற்கு மழுப்பலான பதில் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து கிளம்பினார்.
இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய தம்பிதுரை அதிக வலி ஏற்பட்டதன் காரணமாக மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர் ஜெயகுமாரை சந்தித்து விளக்கம் கேட்டதுடன் சிகிச்சை அளிக்கும் படியும் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவர் சரியான பதில் அளிக்காமல் வேறு ஏதாவது பெரிய மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தம்பிதுரை வேறு ஒரு எக்ஸ்ரே சென்டரில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது ஊசி போட்ட இடுப்பு பகுதியில், 7 மில்லி மீட்டர் அளவிற்கு ஊசியின் முனைப்பகுதி உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது;-
காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்ற தனக்கு மற்றொரு பிரச்சனையை ஏற்படுத்திவிட்டனர். செவிலியரின் அலட்சியமே எனது இடுப்பில் ஊசி சிக்கி இருப்பதற்கு காரணம். அதேபோல மருத்துவமனை நிர்வாகம் தனது புகாரை அலட்சியமாக எடுத்துக் கொண்டதுடன் மிரட்டல் விடுத்தும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டதாக கூறிய அவர், இதுபோன்ற அலட்சியமான சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.