திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 29 வயது பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 29 வயது பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வடுகபாளையம், நஞ்சை தாமரை குளம் பகுதியில் வசிக்கும் மகேஷ் குமார் அவர்களின் மனைவி நந்தினி (29). இவர்களுக்கு மூன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நந்தினி கடந்த 17.11.19 தேதி மாலை 4.30 மணி அளவில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சாலை ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த சாலை வழியாக அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 19.11.19ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் மகேஷ்குமார் அவர்கள் நந்தினியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது.
சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கல்லீரல், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இருதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்குத் தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் ம..நல்லா ஜி பழனிச்சாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் என்றார். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய நந்தினியின் குடும்பத்திற்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.