கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுக்கு பாடை கட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுக்கு பாடை கட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சி பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியின் 11,12 ஆகிய வார்டு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் பிரச்சனையானது இருந்து வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அதனை சரிசெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்கதாசம்பாளையம் 11,12 வார்டு பகுதிகளில் உள்ள சேரன் நகர்,சேரன் நகர் 2 ,பாயப்பனூர் மற்றும் எத்திராஜ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்து 24 நாட்கள் ஆகிய நிலையில் இதுவரை குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து இன்று காரமடையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், காலி குடங்களுக்கு பாடை கட்டி எடுத்து வந்து பெண்கள் ஒப்பாரி வைத்து, சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து, தண்ணீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் அப்பகுதி மக்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.