கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தென்னை மரங்களில் வெள்ளை பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகி தென்னை, வாழை, எலுமிச்சை, தக்காளி போன்ற உற்பத்தி செய்யப்படும் விலை பொருட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

மேலும், வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வாயில் பச்சை துணி கட்டி, வெள்ளை பூச்சிகளால் பாதித்த தென்னை மட்டைகளை கொண்டு வந்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாரளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், கோவை மாவட்டத்தில் வெள்ளை பூச்சிகளால் தென்னை விவசாயமே பல கோடி ரூபாய் மதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கடன் பெற்றவர்கள் வெள்ளை பூச்சி தாக்குதலால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழக அரசின் பூச்சியியல் துறை கொடுத்த மருந்து பலனளிக்கவில்லை எனவும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமானதுதான் மிச்சம் என்று தெரிவித்த அவர்கள், விஞ்ஞான ரீதியிலான கண்டுபிடிப்பை மேற்கொண்டு வெள்ளை பூச்சிகளை அழிக்கும் மருந்தை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த வெள்ளை பூச்சிகள் வெளிநாட்டிலிருந்து இருந்து வந்துள்ளதாக பூச்சியியல் துறை அறிக்கை கொடுத்துள்ளதாகவும் இந்திய விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள அயல்நாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை மத்திய அரசு தடை சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இதனை மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.