கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 72 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 72 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைமுகமாக பதுக்கி வைத்து தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனை தடுப்பதற்காகக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்(தனிப்படை) கந்தசாமி தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் அவ்வழியாக வந்த டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் டெம்போவில் வந்த ஷேஸ்தாராம்(50), மோதிலால்(38) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் இருந்து புகையிலை பொருட்களை கொண்டுவந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் , மோப்பிரிபாளையத்தில் உள்ள மேட்டுக்காடு தோட்டத்து சாலையில் உள்ள குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது, குடோனில் இருந்து தடை விதிக்கப்பட்ட ஹான்ஸ், கணேஷ் போன்ற தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.72 லட்சமாகும். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.