கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு பாரபட்சமின்றி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு பாரபட்சமின்றி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசின் தாயார் பரிமளா, சபரி ராஜனின் தாயார் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிபதிகள் கடந்த 1ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தனர்.
இந்த நிலையில், காவல் துறையின் திறமையற்ற நடவடிக்கைகளால் தான் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றமே தெரிவித்திருப்பதாக ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பாரபட்சமின்றி விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி இன்று மாலை பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில் அனைத்து கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பின்னர் புகார் அளிக்க வந்த ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் வாசுகி கூறும்போது:-
ஆளுங்கட்சியின் தலையீடு இவ்வழக்கில் இருப்பதால் சி பி ஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் எதிரிகள் கடைசிவரை சிறையில் இருப்பதாகவும், முக்கிய வழக்கான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காவல் துறையின் ஆவணப்படுத்துதல் தெளிவற்ற முறையில் இருப்பதால் 2 முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க காரணமான காவல் துறையை கண்டித்து, இன்று மாலை நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை எனில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.